தினகரன் செய்திகள்

 

நீலகிரி மாவட்டத்தில் 350 அரசு பேருந்துகள் திடிரென நிறுத்தம்

Friday December 15th, 2017 05:49:00 PM
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 350 அரசு பேருந்துகள் திடிரென நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தின் பல இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்

Friday December 15th, 2017 05:37:00 PM
கடலூர்: திருப்பூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூரில் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்

Friday December 15th, 2017 05:21:00 PM
கடலூர்: கடலூரில் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவுக்கு கடலூரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு ரூ.5,000 நிவாரணம் : முதலமைச்சர் உத்தரவு

Friday December 15th, 2017 04:58:00 PM
சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மலைவாழ் மக்களுக்கு ரூ.5,000 நிவாரண தொகை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 1,524 மழைவாழ் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

டூர் ஆஃப் நீல்கிரீஸ் சைக்கிள் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

Friday December 15th, 2017 04:57:00 PM
உதகை: சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட சைக்கிள் போட்டி உதகையில் நடைபெற்றது. ரைடர்ஸ் சைக்கிள் பவுண்டேசன் என்ற அமைப்பின் சார்பாக வருடந்தோறும் டூர் ஆஃப் நீல்கிரீஸ் என்ற சைக்கிள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 10-வது முறையாக இந்த சைக்கிள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன், டென்மார்க், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 128 சைக்கிள் பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த சைக்கிள் போட்டி தொடர் 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான போட்டி கடந்த 10-ம் தேதி பெங்களூருரில் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள சைக்கிள் போட்டி வீரர்கள் மைசூர், மடிகேரி, சுல்தான் பத்தேரி வழியாக உதகைக்கு நேற்று மாலை வந்தடைந்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இளைஞர்கள் ஆரோக்கியமாக இருக்கவும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தியாவின் மிகப்பெரிய சைக்கிள் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை இளையான்குடி பகுதியில் சவுடுமண் எடுக்க நீதிமன்றம் இடைக்கால தடை

Friday December 15th, 2017 04:45:00 PM
சிவகங்கை: சிவகங்கை இளையான்குடி பகுதியில் சவுடுமண் எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக சிவகங்கையைச் சேர்ந்த லிங்கத்துறை என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைகிளை இந்த உத்தரவிட்டுள்ளது.

செய்யாறு அருகே தனியார் கம்பெனி பேருந்து சிறைப்பிடிப்பு

Friday December 15th, 2017 04:36:00 PM
செய்யாறு: செய்யாறு அருகே தனியார் கம்பெனி பேருந்தை சோழவரம் கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஷ்லே என்ற கம்பெனி பேருந்து மோதியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த மகேந்திரன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி கம்பெனி பேருந்தை சிறைப்பிடித்துள்ளனர்.

ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கி மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு

Friday December 15th, 2017 04:05:00 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஸ்டேட் வங்கியில் இருந்து பழைய ரூ.500, 1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியதாக ரிசர்வ் வங்கி புகார் தெரிவித்தது. இந்த புகாரின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

வேட்புமனு பரிசீலனைக்கான விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Friday December 15th, 2017 03:59:00 PM
மதுரை: வேட்புமனு பரிசீலனைக்கான வழிகாட்டுதல் மற்றும் விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கண்ணன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனையின் போது யாராவது எதிர்ப்பு தெரிவித்தார் அவர்களிடம் எழுத்துப்பூர்வ மனு பெறவும், விதிகளில் திருத்தம் செய்து வருகின்றன தேர்தல்களில் நடைமுறைபடுத்தவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆய்வின் போது குளிப்பதை பார்த்து விட்டதாக தமிழக ஆளுநர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

Friday December 15th, 2017 03:45:00 PM
கடலூர்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது கடலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கடலூரில் இன்று ஆய்வு பணிகளை ஆளுநர் மேற்கொண்டார். கடலூர் அம்பேத்கர் நகரில் தூய்மை பணிகள் குறித்து ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி செம்மண்டலம், கம்பியம்பேட்டை வழியாக கடலூர் பேருந்து நிலையத்திற்கு சென்று ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அவர் கடலூர் வண்டிப்பாளையம் பகுதிக்கு சென்று அங்குள்ள கழிவறைகளை ஆய்வு செய்தார். இதில் தான் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஆளுநர் வண்டிப்பாளையம் பகுதியில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்த போது, அங்கு கீற்று மறைப்பில் இளம்பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்துள்ளார். இதையறியாத ஆளுநர் கீற்று மறைப்புக்குள் நுழைந்து அங்கு ஆய்வு செய்தார். எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சம்பந்தப்பட்ட இளம்பெண் ஆளுநரை பார்த்ததும் அலறினார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஊர்மக்கள் அப்பகுதியில் கூடியதால் ஆளுநருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியிலிருந்து ஆளுநரை போலீஸார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இந்நிலையில் தாம் குளிக்கும் போது ஆளுநர் அத்துமீறி நுழைந்து பார்த்துவிட்டதாக அந்த இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையிடமும் இது தொடர்பாக புகார் அளித்து ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோர உள்ளதாக இளம்பெண் கூறியுள்ளார். அந்த பெண் புகார் அளித்தால் இச்சம்பவத்தில் ஆளுநர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் காவல்துறையினர் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே ஆய்வுக்கு அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இளம்பெண்ணின் புகாரில் ஆளுநர் சிக்கியுள்ளார். இது அவரை நிச்சயம் ஒரு தர்மசங்கடமான சூழலில் தள்ளியிருக்கும். இனியும் அவர் தமிழகத்தில் ஆய்வை தொடர்வாரா என்பது கேள்விக் குறிதான்.

திருச்செந்தூரை தொடர்ந்து திருவண்ணாமலையிலும் சுவர் இடிந்து விபத்து: 2 பேர் பலி

Friday December 15th, 2017 03:34:00 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாலை விரிவாக்கப் பணியின்போது ரமணர் ஆசிரம சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ரமணர் ஆசிரமம் அருகில், கால்வாய் அமைக்கும் பணியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த குமரேசன், ராஜேஷ் மற்றும் காதர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். ஆசிரம சுற்றுச்சுவர் அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது திடீரென ரமணர் ஆசிரமத்தின் சுற்றுச்சுவர் சரிந்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மேல் விழுந்துள்ளது. இதில் உடல் நசுங்கிய குமரேசன்(வயது25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி, காயமடைந்த இருவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு காதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி நேரில் ஆய்வு செய்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக நேற்று, திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

10, 11, 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு

Friday December 15th, 2017 03:17:00 PM
சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி நிறைவடைகிறது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2018 மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தாம் குளிப்பதை நேரில் பார்த்துவிட்டதாக ஆளுநர் பன்வாரிலால் மீது இளம்பெண் புகார்

Friday December 15th, 2017 03:10:00 PM
கடலூர்: தாம் குளிப்பதை நேரில் பார்த்துவிட்டதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது கடலூர் இளம்பெண் புகார் அளித்துள்ளார். கடலூர் சென்ற ஆளுநர் வண்டிப்பாளையத்தில் கழிவறைகளை ஆய்வு செய்தார். கீற்று மறைப்புக்குள் நுழைந்து அங்கு ஆய்வு ஆளுநர் ஆய்வு செய்தார். கீற்று மறைப்பில் குளித்த இளம்பெண் ஆளுநரை பார்த்ததும் அலறிவிட்டார்.

காரைக்கால் மீனவர்கள் 10 பேரின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Friday December 15th, 2017 02:51:00 PM
கொழும்பு: காரைக்கால் மீனவர்கள் 10 பேரின் காவலை டிசம்பர் 26-ம் தேதி வரை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி கைதான மீனவர்கள் காவல் 2-ம் முறையாக நீட்டிக்கப்பட்டதை அடுத்து யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே அடிப்படை வசதிகள் அமைத்து தர கோரி அரசுப்பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

Friday December 15th, 2017 02:30:00 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சியில் அரசினர் ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி கடந்த 2015ம் தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பள்ளியில் போதிய இடவசதி இல்லை என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கழிவறை, குடிநீர்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வி அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து இன்று காலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பள்ளியின் நுழைவு வாயில் கதவில் பூட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்யும் வரை பள்ளியை திறக்க விட மாட்டோம் என்று கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 நாள் கடலூர் பயணம் முடிவு: சென்னை புறப்பட்டார் ஆளுநர் பன்வாரிலால்

Friday December 15th, 2017 02:27:00 PM
கடலூர்: 2 நாள் கடலூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை புறப்பட்டுள்ளார். கடலூர் ஆட்சியர் உட்பட 15 அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து ஆளுநர் சென்னை புறப்பட்டார்.

திருவண்ணாமலையில் ஆசிரமம் விபத்து: பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு

Friday December 15th, 2017 02:10:00 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்து குமரேசன் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காதர் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

உயிருடன் உள்ளவரை சாதியை ஒழிக்க போராடுவேன்: கவுசல்யா பேட்டி

Friday December 15th, 2017 01:06:00 PM
திருப்பூர்: உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது வரவேற்கத்தக்கது என்றும் சங்கர் படுகொலைக்கு நீதி கிடைத்துள்ளது என்றும் சங்கரின் மனைவி கவுசல்யா தெரிவித்துள்ளார். சாதிய படுகொலை செய்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு மனத்தடையாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மரணதண்டனை அளித்ததும் அவர்களுக்கு தண்டனை கிடைக்கப்போவதில்லை என்று அவர் கூறினார். ஆணவக் கொலை வழக்கில் 3 பேர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று அவர் தெரிவித்தார். மேலும் எனக்கு பாதுகாப்பு அளிக்க காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த கவுசல்யா, உயிருடன் உள்ளவரை சாதியை ஒழிக்க போராடுவேன் என்று கூறியுள்ளார். தந்தை குற்றவாளி என்றால் தாயும் குற்றவாளி தான் என்று மேற்முறையீடு செய்ய உள்ளதாகவும், தண்டிக்கப்பட்ட குற்றவாளியை என் தந்தை என்று குறிப்பிடாதீர்கள் என்றும் கவுசல்யா தெரிவித்தார். ஆவணப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அனைத்து இயக்கங்களும் எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் என்றும் கவுசல்யா கூறியுள்ளார்.

ஏ.டி.எம். கொள்ளையர்கள் 8 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்

Friday December 15th, 2017 01:02:00 PM
கோவை: ஏ.டி.எம். கொள்ளையர்கள் 8 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவையில் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த 8 பேர் நாமக்கல் மற்றும் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலையில் ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

Friday December 15th, 2017 12:58:00 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரிவலப்பாதை விரிவாக்க பணியின் போது அருகே இருந்த சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.


வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 358 புள்ளிகள் உயர்வு

Friday December 15th, 2017 10:29:00 AM
மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 358 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 402.75 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 358.11 புள்ளிகள் உயர்ந்து 33,605.11 புள்ளிகளாக உள்ளது. உலோகம் மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.87% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 110.20 புள்ளிகள் அதிகரித்து 10,362.30 புள்ளிகளாக உள்ளது.அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎப்சி வங்கி, எல் அண்ட் டி மற்றும் டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் விலை 2.48% வரை உயர்ந்திருந்தது.ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.96%, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.48% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.88% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.31% வரை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் உயர்வு

Friday December 15th, 2017 10:24:00 AM
மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.64.11 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் அதிகரித்து ரூ.64.34 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 15 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.71.61 ; டீசல் ரூ.61.48

Friday December 15th, 2017 06:26:00 AM
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.61-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.48-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

வாரச்செலவுக்கு ரூ.4.3 லட்சம்: மல்லையாவின் ரூ.10,000 கோடி சொத்துக்களை முடக்க உத்தரவு

Friday December 15th, 2017 02:09:00 AM
லண்டன் : கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, தனது நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இதுதவிர இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் ஆஜராகாத மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். அவரை நாடுகடத்த கோரிய வழக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் 8 நாட்களாக நடைபெற்று வந்தது. இறுதி நாள் விசாரணையில், தலைமை மாஜிஸ்திரேட் எம்மா லூயிஸ் அர்பத்னோட், இருதரப்பு விவாதங்களை கேட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது எனவும், குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் மல்லையா தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.  ஆனால், வங்கிகள் சார்பில் வைக்க கோரிக்கைப்படி அவரது சொத்துக்களை உடனடியாக முடக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.  இதன்படி லண்டனில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.10,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை அடுத்த ஆண்டு ஏப்ரல் 11 வரை முடக்க மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார். மல்லையாவின் செலவுக்கு இந்திய மதிப்பின்படி, வாரம் சுமார்  ரூ.4.3 லட்சம் மட்டும் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு

Friday December 15th, 2017 02:08:00 AM
புதுடெல்லி : வங்கி கணக்கு, செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜராகி வாதிடுகையில், ‘‘அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் பலவற்றில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு விரும்புகிறது. ஆதார் எண் இல்லாதவர்கள் மீது எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது. அவர்களுக்கான சலுகைகள், நலத்திட்டங்கள் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தப்படாது’’ என்றார். நீதிபதிகள் கூறுகையில், ‘‘ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை அடுத்தாண்டு ஜனவரி 17ம் தேதி தொடங்கும். இந்த வழக்கில் நாளை இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும்’’ என அறிவித்தனர். அதன்படி, இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கான பின்னலாடை விற்பனை கடந்த ஆண்டை விட குறைவு

Friday December 15th, 2017 02:07:00 AM
திருப்பூர் : கிறிஸ்துமஸ்  பண்டிகை பின்னலாடை விற்பனை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் குறைந்துள்ளது.  இதனால், திருப்பூர் பனியன் வர்த்தகர்கள் கவலை அடைந்துள்ளனர். திருப்பூரில்  இருந்து ஆண்டுதோறும் ஒவ்வொரு பண்டிகை சமயங்களிலும் சிறப்பு பின்னலாடைகள்  தயாரித்து அனுப்பி வைப்பது வழக்கம். குறிப்பாக தீபாவளி, புத்தாண்டு,  கிறிஸ்துமஸ், ஆயுதபூஜை, துர்கா பூஜை, தசரா போன்ற நேரங்களில் சிறப்பு  டிசைன்களுடன் பின்னலாடை தயாரிக்கப்படும். இந்த ஆடைகளை உருவாக்க  தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதற்கான தொழிலாளர்கள்  நியமிக்கப்படுகின்றனர். பண்டிகை கால சிறப்பு ஆடைகளை தயாரிக்கும்  தொழிலாளர்களுக்கு கூடுதல் பணி நேரங்களும் அதற்குரிய கூடுதல் கூலி  கட்டணங்களும் வழங்கப்படுகின்றன.டிசம்பர் மாத பின்னலாடைகளின் ஏற்றுமதி மற்ற  மாதங்களை விட 25 சதவீதம் கூடுதலாக இருக்கும். கிறிஸ்துமஸ் மற்றும்  புத்தாண்டுக்கான சிறப்பு ஆடைகளை வாங்க வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள்  முன்கூட்டியே ஆர்டர்களை வழங்கிவிடும். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை  தினத்திற்காக சிறப்பு பின்னலாடைகள் தயாரிப்பு பணிகள் திருப்பூரில் தீவிரம்  அடைந்துள்ளன. இதற்கான சிறப்பு டிசைன்கள் வழங்கப்பட்டு, அந்த டிசைன்களுக்கு  ஏற்ற வகையில், நூல், நிட்டிங், பிரிண்டிங், எம்பிராய்டரி போன்ற பணிகள்  மேற்கொள்ளப்பட்டு ஆடைகள் தயாராகின்றன. இந்த டிசைன்களின் பணிகளை அவ்வப்போது  ஆன்லைன் மூலம் வெளிநாட்டு  வர்த்தகர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.  டிசைன்களில் ஏதேனும் மாற்றங்களை செய்ய வெளிநாட்டவர் விரும்பினால் அதற்கேற்ற  வகையில் பணிகளை மாற்றி ஆடைகளை தயாரிக்கின்றனர். வெளிநாட்டு ஏற்றுமதியை  போலவே உள்நாட்டு வர்த்தகத்திலும் கிறிஸ்துமஸ் ஆடைகளே முன்னிலை வகிக்கின்றன.  மும்பை, கோவா, புதுடெல்லி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கு கூடுதல்  கிறிஸ்துமஸ் ஆடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.மற்ற பகுதிகளை விட  கேரளாவுக்கு அதிக எண்ணிக்கையில் கிறிஸ்துமஸ் ஆடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு, பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி பிரச்னை உள்ளிட்ட  காரணங்களால், கடந்த ஆண்டை விட ,இந்த ஆண்டு சுமார் 20 சதவீதம் வரை  கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பனியன்  வர்த்தகர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிஸ்மா சங்க  பொதுச்செயலாளர் பாபுஜி கூறியதாவது: ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பனியன்  பொருட்களை நாடுமுழுவதும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படும். மற்ற  மாநிலங்களை விட கேரளாவுக்கு கூடுதலாக கிறிஸ்துமஸ் ஆடைகள் அனுப்பி  வைக்கப்படும். பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால்  இந்த ஆண்டு விற்பனை, கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது  என்றார்.திருப்பூர் பனியன் வர்த்தகர்கள் கவலை* வழக்கமாக ஆண்டுதோறும் டிசம்பரில் பின்னலாடை ஏற்றுமதி மற்ற மாதங்களை விட 25% கூடுதலாக இருக்கும்.* வெளிநாட்டு வர்த்தகம் மட்டுமின்றி, உள்நாட்டிலும் கிறிஸ்துமஸ் சீசன் ஆடைகள் முன்னிலை வகிக்கின்றன.* ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தால் இந்த ஆண்டு சுமார் 20% ஆடை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

ரூ.3.14 கோடிக்கு தேயிலை ஏலம்

Friday December 15th, 2017 02:06:00 AM
கோவை : கோவையில் இந்த வாரம் நடந்த தேயிலை விற்பனையில் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி ரக தேயிலை 3.14 கோடிக்கு விற்றது. இது கடந்த வாரத்தை விட ரூ.38 லட்சம் அதிகம். கோவை தேயிலை வர்த்தக மையத்தில் புதன்கிழமை மாலை தோறும் ஏல முறையில் தேயிலைத்தூள் விற்பனை நடக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை நடந்த ஏலத்தில் உள்ளூர் ரகம் (டஸ்ட்) 2.95 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 2.32 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ 94.16. விற்பனை மதிப்பு 2.19 கோடி. ஏற்றுமதி ரகம்(லீப்) 1.62 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. 1.14 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ 83.53. விற்பனை மதிப்பு 95 லட்சம். கடந்த வார விற்பனையோடு ஒப்பிடுகையில், உள்ளூர் ரகம் கிலோவுக்கு 1.98 கூடியுள்ளது. ஏற்றுமதி ரகம் 2.12 சரிவடைந்துள்ளது.  மொத்தத்தில் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி ரக தேயிலைத்தூள் 3.14 கோடிக்கு விற்றுள்ளது.

எல்ஐசியில் எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்? : மண்டல மேலாளர் தகவல்

Friday December 15th, 2017 02:05:00 AM
சென்னை : ஆயுள் காப்பீட்டு கழகமான எல்ஐசி (தெற்கு மண்டலம்) மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் கூறியதாவது: மக்கள் தன் சேமிப்பின் பலனை தானே அனுபவிக்க எண்டோன்மென்ட் திட்டம் உள்ளது. பாலிசிதாரர் இறந்தாலும், வாரிசுக்கு காப்பீடு தொகை கிடைக்கும். புதிய எண்டோன்மென்ட் திட்டத்தில் 8 வயது முதல் 55 வயது வரை உள்ள நபர்கள் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட காப்பீட்டு தொகையை 12 முதல் 35 ஆண்டு திட்ட காலத்துக்கு பெறலாம். பென்ஷன் போல தொடர்ச்சியான வருமானம் மற்றும் 8% உத்தரவாத தொகையை பெற எல்ஐசி ஜீவன் உமங் திட்டம் உள்ளது. இதில் பிரீமியம் செலுத்தும் காலம் முடிந்ததும் காப்பீட்டு தொகையில் 8% பாசிலிசிதாரர் மரணம் அல்லது 100 வயது வரை வழங்கப்படும். பங்குச்சந்தையுடன் இணைந்த காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. இதில் காப்பீடு நிறுவனம் காப்பீடு வழங்க தேவையான பிரீமியத்தை எடுத்துக்கொண்டு மீதி பணத்தை பாலிசிதாரர் விருப்பத்துக்கேற்ப பங்குச்சந்தையில் முதலீடு செய்யும். என்டோன்மென்ட் பிளஸ் திட்டம் இத்தகைய சிறப்புகள் கொண்டது.  இதுபோல் புற்றுநோய்க்கு கேன்சர் கவர் பாலிசி உள்ளது. ஜீவன் அக்ஷய் திட்டம் பாலிசிதாரரின் வயது மற்றும் முதலீட்டுக்கு ஏற்பட உடனடி பென்ஷன் வழங்குகிறது. வட்டி விகிதம் குறைந்தாலும் பென்ஷனில் மாற்றம் இருக்காது என்றார்.

சில்லறை விலை பண வீக்கத்தை தொடர்ந்து மொத்தவிலை பணவீக்கமும் அதிகரிப்பு

Thursday December 14th, 2017 01:15:00 PM
புதுடெல்லி: சில்லறை விலை பண வீக்கத்தை தொடர்ந்து மொத்தவிலை பணவீக்கமும் அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்க விகிதம் 0.34 சதவீதம் குறைந்துள்ளது. அக்டோபரில் 3.59 சதவீதம் இருந்த மொத்தவிலை பணவீக்க விகிதம் நவம்பரில் 3.93 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 117 புள்ளிகள் உயர்வு

Thursday December 14th, 2017 11:05:00 AM
மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 117 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 402.75 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 116.70 புள்ளிகள் உயர்ந்து 33,169.74 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் உலோகம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.85% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37.70 புள்ளிகள் அதிகரித்து 10,230.65 புள்ளிகளாக உள்ளது.டாக்டர் ரெட்டிஸ், ஓஎன்ஜிசி, விப்ரோ, பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஹெரோமொடோ கார்ப் மற்றும் லூபின் போன்ற நிறுவன பங்குகள் விலை 0.86% வரை உயர்ந்திருந்தது. ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.29% உயர்ந்துள்ளபோது, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.20% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.14% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.33% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்வு

Thursday December 14th, 2017 10:59:00 AM
மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.64.28 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைந்து ரூ.64.44 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 14 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.71.58 ; டீசல் ரூ.61.43

Thursday December 14th, 2017 06:19:00 AM
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.58-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.43-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

2 ஆண்டுகளில் என்எல்சி நிறுவனம் அபார வளர்ச்சி

Thursday December 14th, 2017 01:45:00 AM
நெய்வேலி : நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சியில் 2015 மார்ச் 31 தேதியுடன் ஒப்பிடுகையில் கடந்த 1ம் தேதி மின் உற்பத்தி 81 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2014-15ம் நிதியாண்டில் வர்த்தக தொகை மற்றும் நிகர லாபத்தை ஒப்பிடும் போது 2016-17ம் இந்நிறுவனம் முறையே 42.50%, 50% வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி மத்திய அரசுக்கு ஈவுத்தொகை, பகிர்மான வரி ரூ.4695 கோடியை வழங்கியுள்ளது.

இந்தியன் வங்கி எப்சிஎன்ஆர் வட்டி மாற்றம்

Thursday December 14th, 2017 01:45:00 AM
சென்னை : இந்தியன் வங்கி எப்சிஎன்ஆர் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை மாற்றம் செய்துள்ளது. இந்தியன் வங்கியில் அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்படும் எப்சிஎன்ஆர் (பி) டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி ஓராண்டுக்கு மேல் 2 ஆண்டுக்குள் உள்ள டெபாசிட் வட்டி 2.63 சதவீதத்தில் இருந்து 2.77 சதவீதமாகவும், 2 ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுக்குள் உள்ள டெபாசிட் வட்டி 2.8 சதவீதத்தில் இருந்து 2.92 சதவீதமாகவும், 3 ஆண்டுக்கு மேல் 4 ஆண்டுக்குள் உள்ள டெபாசிட்களுக்கு 2.96 சதவீதத்தில் இருந்து 3.08 சதவீதமாகவும், 4 ஆண்டுகளுக்கு மேல் 5 ஆண்டுகளுக்குள் உள்ள டெபாசிட்டுக்கு 3.05ல் இருந்து  3.15 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கு மேல் 3.14 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் இந்த மாதம் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளதாக இந்தியன் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிமென்ட் ஷீட், இரும்பு பைப் பயன்பாட்டால் முறிந்துபோனது மூங்கில் வியாபாரம்

Thursday December 14th, 2017 01:44:00 AM
வேலூர் : நூற்றாண்டு பழமையான வேலூர் மூங்கில் மண்டியில் வியாபாரம் முடங்கி போயுள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான வீடுகள் குடிசை வீடுகளாகவே இருந்தது. குடிசை வீடுகளுக்கு முக்கிய தேவையாக மூங்கில் கழிகள் பயன்படுத்தப்பட்டன. அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் குடிசைகள் அமைக்க மூங்கில் கழிகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் சுப விசேஷங்கள், திருவிழாக்கள், இறந்தோர் சடங்குகளுக்காக தென்னை ஓலைகளால் பந்தல்கள் அமைக்கப்படும். இதற்கும் மூங்கில் கழிகள் பயன்படுத்தப்படும். மூங்கில் கழிகள் தேவையென்றால் லாங்கு பஜாரை ஒட்டியுள்ள வேலூர் மூங்கில் மண்டிகளில் வாங்கிச்செல்வார்கள்.  இதுதவிர வேலூர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள மூங்கில் மற்றும் பிரம்பால் மூங்கில் கூடைகள், காவடிகள், முறம், பூக்கூடைகள், மூங்கில் சேர்கள், ஏணிகள் என மூங்கில் பொருட்களை செய்யும் கைவினைஞர்களும் வேலூர் மூங்கில் மண்டிகளுக்கு வருவர்.அந்த மண்டிகளுக்கு ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, பண்ருட்டி பகுதிகளில் இருந்து வாரத்திற்கு 10 லோடு மூங்கில் கழிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும். காலமாற்றத்தினால் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சிமென்ட் சீட்டுகள், இரும்பு சீட்டுகள், கான்கிரீட் தளங்கள் என்று கட்டிடங்கள் நவீன முறையில் அமைத்து வருகின்றனர். அதேபோல் பந்தல்களும், துணி பந்தல்களாக மாறியதால் அவற்றுக்கான மூங்கில் கழிகளுக்கு பதில் இரும்பு பைப்புகளாக தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதனால் மூங்கிலின் தேவையும் குறைந்து போனது. தேவை குறைந்ததால் மூங்கில் வரத்தும் குறைந்து போனது.  வேலூர் மூங்கில் மண்டிகளில் தற்போது 20 அடி மூங்கில் கழி ரூ.250க்கும், 15 அடி ரூ.120க்கும், 12 அடி ரூ.80க்கும், 10 அடி ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாரத்திற்கு 10 லோடு மூங்கில் விற்பனையான வேலூர் மூங்கில் மண்டிகளில் தற்போது வாரத்திற்கு ஒரு லோடு மூங்கில் கழிகள் கொண்டு வந்தாலும் விற்பனையாவதில்லை என்று வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைனில் ஆராய்ந்து கார் வாங்கும் இந்தியர்கள்

Thursday December 14th, 2017 01:44:00 AM
புதுடெல்லி : வாகனங்களை ஆன்லைனில் ஆராய்ந்து பார்த்த பிறகு இந்தியர்கள் வாங்குகின்றனர் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியர்கள் வாகனம் வாங்குவதுகுறித்து கூகுள் இந்தியாவுடன் தனியார் அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. இதில் கார் வாங்குபவர்களில் ஏறக்குறைய 96 சதவீதம் பேர், ஆன்லைனில் ஆய்வு செய்து முடிவு செய்துள்ளனர். வீடியோக்களை பார்த்து முடிவு செய்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 75 சதவீதம் பேர் இவ்வாறு வாகனங்களை தேர்வு செய்துள்ளனர். தற்போது இது அதிகரித்துள்ளது. இதுபோல் ஆன்லைன் வீடியோக்களை பார்த்து முடிவு செய்பவர்கள் 80 சதவீதம் பேர். 88 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் மூலம் வாகன விவரங்களை பார்க்கின்றனர். கார் உற்பத்தி துறையில் யூடியூப் பங்களிப்பு அபரிமிதமாக உள்ளது. இதில் வாகன விவரங்களை பார்ப்பவர்கள் முந்தைய ஆண்டை விட 2.25 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கேற்ப கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றி வருகின்றன. ஆன்லைனில் வாகன விவரங்களை பார்ப்பவர்களில் 41 சதவீதம் பேர் பாதுகாப்பு சோதனைகளை பார்க்கின்றனர். 41 சதவீதம் பேர் தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு அம்சங்களையும், வாகன திறனை 38 சதவீதம் பேரும், விமர்சனங்களை 38 சதவீதம் பேரும் பார்ப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 27 சந்தைகளில் 13,800 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உட்பட பிட்காயின் பரிவர்த்தனை மையங்களில் வருமானவரித்துறை அதிரடி ரெய்டு

Thursday December 14th, 2017 01:43:00 AM
புதுடெல்லி : நாடு முழுவதும் பிட்காயின் பரிவர்த்தனை மையங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிட்காயின் என்பது முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவில் உள்ளது. உருவம் இல்லாத பணம் இது. கம்ப்யூட்டரில் மென்பொருள் போல இது சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.இதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி போல, எந்த ஒரு நாட்டின் அரசு அல்லது அமைப்பால் இதை கட்டுப்படுத்த முடியாது. ஆனாலும் உலக அளவில் சில நிறுவனங்கள் பிட்காயின் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்கின்றன.  வங்கியில் நாம் வைத்துள்ள பணத்தை இன்டர்நெட் வங்கி, கார்டு மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். ஆனால் பிட்காயின் மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் பரிவர்த்தனை செய்யக்கூடியது. இரு நாடுகளிடையே கரன்சி மதிப்பு பற்றிய கவலை இன்றி இந்த பரிவர்த்தனையை மேற்ெகாள்ளலாம். ஆனால் நம்பகத்தன்மை இல்லாததாலும், எந்த பெரும்பாலான நாடுகள் சட்டப்பூர்வமாக இதை அங்கீகரிக்காததாலும் இதனை தடை செய்துள்ளன. இந்தியாவிலும் இது தடை செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஏற்கெனவே இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டில் மட்டும் ஒரு பிட்காயின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து 17,000 டாலரை தாண்டி விட்டது.  இந்நிலையில், இந்தியாவில் சில பிட்காயின் மையங்கள் இவற்றை பரிவர்த்தனை செய்வதாக கிடைத்த தகவலின்படி, பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறையின் புலனாய்வு அமைப்பு ரெய்டு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, குருகிராம் ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரி அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். வருமான வரிச்சட்டம் 133ஏ பிரிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. பிட்காயின் வைத்திருப்பவர்கள், பரிவர்த்தனை செய்பவர்கள் மீது முதன் முதலாக நடத்தப்படும் மிகப்பெரிய ரெய்டு இது. பிட்காயின் இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை. ரெய்டில் சுமார் 25 லட்சம் நிறுவனங்கள் அதிக பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் சுமார் 10 லட்சம் நிறுவனங்கள் தொடர்ந்து பரிவர்த்தனை செய்வதாக தெரிய வந்துள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மயக்கும் ‘மாயக்காசு’* பிட்காயின் என்பது, கண்களால் பார்க்க இயலாத, தொட்டு உணர முடியாத டிஜிட்டல் வடிவ பணம். கம்ப்யூட்டர் கரன்சி எனவும் கூறப்படுகிறது.* பிட்காயினை கட்டுப்படுத்த எந்த ஒரு அமைப்பும் கிடையாது.* 2009ம் ஆண்டுக்கு பிறகு பிட்காயின் புழக்கம் ஆன்லைனில் துவங்கி பிரபலமானது.* இந்தியாவில் பிட்காயின் பரிவர்த்தனை அங்கீகரிக்கப்படவில்ைல. இதில் முதலீடு செய்து கிடைக்கும் லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும் என அரசு எச்சரித்துள்ளது.* பிட்காயினில் முதலீடு செய்து ஏமாறவேண்டாம் என்று ரிசர்வ் வங்கியும் எச்சரிக்கை விடுத்துள்ளது.* பல மடங்கு லாபம் கிடைப்பதாக கூறப்படுவதால், இதில் பலர் முதலீடு செய்து வருகின்றனர்.* ஒரு பிட்காயினின் இந்திய மதிப்பு சுமார் ரூ.11 லட்சம் என கூறப்படுகிறது.* விண்ணை முட்டும் அளவு மதிப்பு உயர்ந்து கொண்டே போனாலும், புலப்படாத இந்த கரன்சி மதிப்பு ஒரு நாளில் பலூன்போல பெரிதாகி வெடித்து சிதறிவிடும் என்று பொருளாதார நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.* இந்தியாவில் மாதத்துக்கு சராசரியாக ரூ.5,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது.* பிட்காயின் எக்ஸ்சேஞ்ச்களில் தினமும் சுமார் 50,000 பேர் பதிவு செய்கின்றனர்.

காலக்கெடுவை நீட்டித்தது மத்திய அரசு வங்கிக் கணக்குடன் ஆதாரை மார்ச் 31 வரை இணைக்கலாம்

Thursday December 14th, 2017 01:42:00 AM
புதுடெல்லி  : வங்கிக் கணக்குடன் ஆதார், பான் எண்ணை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கி கணக்குடன் ஆதார், பான் எண்ணை இணைக்க இம்மாதம் 31ம் தேதி வரை காலக்கெடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு ெதாடர்ந்த நிலையில், இந்தக் காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. அல்லது வங்கிக் கணக்கை ஆரம்பித்து 6 மாதங்களுக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதில் எந்த தேதி கடைசியாக வருகிறதோ, அந்த தேதிக்குள் ஆதார் எண் வங்கியில் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தங்கம் விலை சிறிது உயர்வு

Thursday December 14th, 2017 12:04:00 AM
புதுடெல்லி: உள்ளூர் நகை வியாபாரிகள் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டியதால், தொடர்ந்து மூன்று நாள் இறங்கு முகத்தில் இருந்த தங்கம் விலை, நேற்று உயர்ந்தது. தலைநகரில் நேற்று தங்கம் விலை ரூ.35 உயர்ந்து, 10 கிராம் ரூ.29,435க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன்(8 கிராம்) எடையிலான ஆபரண தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி ரூ.24,400க்கு விற்பனையானது. எனினும் தொழில் நிறுவனங்கள் மற்றும் நாணய தயாரிப்பாளர்கள் வெள்ளி உலோகத்தின் மீது ஆர்வம் காட்டாததால் அதன் விலையில் தொடர் சரிவு இருந்து வருகிறது. நேற்றும் ஒரு கிலோ எடையிலான வெள்ளி ரூ.175 குறைந்து ரூ.37,600க்கு விற்கப்பட்டது. வாரச்சந்தையிலும் இதன் விலை ரூ.120 குறைந்து ரூ.36,780க்கு விற்பனை செய்யப்பட்டது. நூறு எண்ணிக்கையிலான வெள்ளி நாணயங்களின் விலையும் மாற்றமின்றி, அதன் வாங்கும் விலை ரூ.70,000 ஆகவும், விற்கும் விலை ரூ.71,000 ஆகவும் இருந்தது.

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 105 புள்ளிகள் சரிவு

Wednesday December 13th, 2017 10:49:00 AM
மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 105 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 227.80 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.55 புள்ளிகள் சரிந்து 33,123.44 புள்ளிகளாக உள்ளது. எஃப்எம்சிஜி, வங்கி மற்றும் மின்சாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை குறைந்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 29.60 புள்ளிகள் குறைந்து 10,210.55 புள்ளிகளாக உள்ளது.ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.22% உயர்ந்துள்ளபோது, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.12% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.66% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.49% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


வாக்கு எந்திரத்தில் பாஜக முறைகேடு செய்கிறது: கர்நாடக முதலமைச்சர்

Friday December 15th, 2017 06:04:00 PM
பெங்களூரு: தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு, வாக்கு எந்திரத்தில் பாஜக முறைகேடு செய்கிறது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் வாக்கு எந்திரத்திற்கு பதிலாக, வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத உள்ளேன்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு

Friday December 15th, 2017 05:17:00 PM
புதுடெல்லி: டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு கட்டண சலுகை அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 வரையிலான பண பரிவர்த்தனைக்கு மத்திய அரசே கட்டணத்தை செலுத்திவிடும் என்றும் அறிவித்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுவரை தமிழகத்தை சேர்ந்த 10,558 பேர் செம்மரக்கடத்தல் வழக்கில் கைது

Friday December 15th, 2017 04:38:00 PM
திருப்பதி: தமிழகத்தை சேர்ந்த 10,558 பேர் செம்மரக்கடத்தல் வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தாராவ் திருப்பதியில் பேட்டியளித்தார். செம்மர கடத்தல்காரர்களை பிடித்தவுடன் கண்காணிக்க புதிய செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது நியூட்டன்!

Friday December 15th, 2017 03:58:00 PM
புதுடெல்லி: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவின் நியூட்டன் திரைப்படம், முதல் சுற்றிலேயே வெளியேறியது. 2018ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, வரும் மார்ச் 4ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவுக்காக, இந்தியா சார்பில் நியூட்டன் என்ற இந்தி திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் முதல் சுற்றிலேயே வெளியேறியதாக, ஆஸ்கர் தேர்வுக்குழு தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான வகை பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஆஷுதோஷ் கோவாரிகரின் 'லகான்' 2001ல் இடம்பெற்றது. ஆனால், இதுவரை எந்த இந்திய திரைப்படமும் ஆஸ்கார் விருதை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்

Friday December 15th, 2017 03:41:00 PM
பெங்களூர்: நடிகை சன்னி லியோன் பெங்களூருவில் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெங்களூரில் டிசம்பர் 31ம் தேதியன்று இரவு, மான்யதா டெக் பார்க்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்று நடனம் ஆட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க கூடாது என்று கர்நாடக ரக்ஷன வேதிகே யுவ சேனை என்ற கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சன்னி லியோனின் உருவ புகைப்படங்களை எரித்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்

Friday December 15th, 2017 03:28:00 PM
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ஹர்டாவில் உள்ள மொத்த வியாபார சந்தையில் விவசாயிகள் சேவல்களை போன்று போஸ் கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதய்பூரில் இரு சமூகத்தினரிடையே மோதல் : லவ் ஜிகாத் பிரச்னையில் கொலையாளிக்கு கைது எதிர்ப்பு தெரிவித்து பேரணி

Friday December 15th, 2017 03:19:00 PM
ஜெய்ப்பூர் :ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வெடித்ததால்பதற்றம் நிலவி வருகிறது. லவ் ஜிகாத் என்ற பெயரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி முகமது அப்ரசுல் என்பவரை கொலை செய்தவர்கள்  அதனை வாட்ஸ் அப் மூலம் பரவ செய்ததால், உதய்பூரில் மோதல் வெடித்தது. சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்த தொழிலாளிக்கு ஆதரவாக போராட்டம் தொடங்கியதால் கொலையாளி சம்புலால் ரேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இதனால் சம்புலால் ரேகருக்கு ஆதரவாக திரண்ட ஹிந்துத்துவா அமைப்பினர் உதய்ப்பூரில் பிரமாண்ட பேரணி நடத்தினர். இதனை போலீசார் தடுத்ததால் பதற்றம் நிலவியது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தி 50 பேரை கைது செய்தனர். தொடர்ந்து இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டுள்ளன. உதய்பூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

முத்தலாக் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ஜனவரியில் புதிய சட்டமாகிறது!

Friday December 15th, 2017 03:02:00 PM
டெல்லி: முத்தலாக் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முத்தலாக் விவாகரத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு இஸ்லாமிய பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முத்தலாக் கூறி உடனே விவாகரத்து செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவாகரத்தான இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம் பெற சட்ட மசோதா வகை செய்கிறது. முத்தலாக் மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோரை கொண்ட மத்திய மந்திரிகள் குழு ’முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ என்ற புதிய சட்ட முன்வரைவை தயாரித்துள்ளது. இந்த சட்ட முன்வடிவுக்கு உத்தரப்பிரதேசம் அரசு முதல் மாநிலமாக ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த மசோதா ஏற்றுகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கையெப்பமிட்ட பின்னர் வரும் ஜனவரியில் இந்த மசோதா 'முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் புதிய சட்டமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை ஆராய காங்கிரஸ் வழக்கு : கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Friday December 15th, 2017 02:59:00 PM
புதுடெல்லி: நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதிக்கக்கோரி காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். யாருக்கு வாக்களித்தோம் என்ற தகவல் சீட்டை ஆராய உத்தரவிடுமாறு காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது.

ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை : தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

Friday December 15th, 2017 02:54:00 PM
டெல்லி: ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் கங்கை போன்ற நதிகள் மாசுடைகின்றன. நதிகள் மாசடைவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி. மேக்தா தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஸ்வாத்தனார் குமார் தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவு பின்வருமாறு: ஹரித்வார், ரிஷிகேஷ் பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கரண்டி, டம்ளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுபவர்களிடம் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரிலிருந்து உத்தர்காசி மாவட்டம் வரை பிளாஸ்டிக் பொருட்களை விற்க, தயாரிக்க மற்றும் சேமித்து வைக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

முத்தலாக் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Friday December 15th, 2017 02:42:00 PM
புதுடெல்லி: முத்தலாக் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால் நாடாளுமன்றத்தில் இந்த கூட்டத்தொடரிலேயே மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ப்ளூடூத் இணைத்து முறைகேடு : உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு

Friday December 15th, 2017 02:36:00 PM
புதுடெல்லி: குஜராத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான 25 சதவீத வாக்குகளை ஒப்பிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனுத்தாக்கல் செய்தது. காங்கிரஸ் தொடர்ந்த இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ப்ளூடூத் இணைத்து முறைகேடு என்று காங்கிரஸ் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஓகி சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் முறையீடு

Friday December 15th, 2017 02:28:00 PM
டெல்லி : ஓகி புயலில் சிக்கி காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு  தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் குரல் எழுப்பினர். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு ஓகி புயல் சீற்றத்தால் ஏற்பட்ட சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி   அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் முறையிட்டார். அப்போது பேசிய அவர், ஓகி புயல் சீற்றத்தால் குமரி மாவட்டம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது என்றார். இது குறித்து பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே ஓகி சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.     அப்போது பிரச்னையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக அவைத் தலைவர் வெங்கயா நாயுடு உறுதி அளித்தார்.தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் பதவி பரிவு பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பியதால் அவையில் கூச்சம், குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் 12 மணிக்கு மீண்டும் கூடியபோது , எதிர்க்கட்சி உறுப்பினர் மீண்டும அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை மீண்டும் ஒத்திவைக்க நேரிட்டது.

இமாச்சல்லில் மழையுடன் பனிப்பொழிவு : வாட்டி வதைக்கும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

Friday December 15th, 2017 02:12:00 PM
தர்மசாலா: வடஇந்திய மாநிலங்களில் பனியுடன் குளிர் வாட்டி வதைப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் குளிர்காற்றுடன் கடும் பனிப்பொழிவு வீசுவதால் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குளிரை சமாளிக்க தீயை மூட்டி அதனருகே அமர்ந்து பொழுதை கழிக்கின்றனர். சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி செல்கின்றன. காலையில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தர்மசாலாவில் தொடர்ந்து பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே தலைநகர் டெல்லியிலும் குளிர் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தியா கேட் சாலையில் எதிரே வருபவர்களை பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக 25 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் 2 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன மற்றும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஓகி புயல் நிவாரண நிதியை உடனே வழங்கக்கோரி கேரள மீனவர்கள் போராட்டம்

Friday December 15th, 2017 01:47:00 PM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன்பு கேரள மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரள அரசு அறிவித்த ஓகி புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் கலைத்தனர்.

2020ம் ஆண்டு முதல் மண்ணெண்ணெய் மானியத்தை முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு திட்டம்

Friday December 15th, 2017 01:05:00 PM
புதுடெல்லி: மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை வருகிற 2020ம் ஆண்டு முதல் முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாட்டில் மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அதே நேரத்தில் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டதும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் இன்னும் 2 ஆண்டுகளில் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டம் மூலமும், சவுபாக்யா திட்டம் மூலமும் 100 சதவீதம் மக்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தினசரி மண்ணெண்ணெய் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மண்ணெண்ணெய்க்கு மட்டும் கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.7.595 கோடி மானியம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் அது ரூ.4.500 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 40% குறைவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே நிலையை படிப்படியாக பின்பற்றி வருகிற 2020-ம் ஆண்டில் மண்ணெண்ணெய்க்கான மானியம் முழுவதையும் ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக சில மாநிலங்களுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது: ராஜஸ்தான் போலீசார் அதிரடி

Friday December 15th, 2017 01:01:00 PM
ஜோத்பூர்: ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக போலீசாரை தாக்கிய செங்கல்சூளை உரிமையாளர் தேஜாராம் உட்பட 4 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். செங்கல்சூளை உரிமையாளரின் மனைவி பித்யா மற்றும் மகள்கள் சுகுணா, ராஜல் ஆகியோரை ராஜஸ்தான் போலீஸ் கைது செய்தது.  கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் உள்ளிட்ட தமிழக போலீசாரை தாக்கியதால் ராஜஸ்தான் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நாதுராமின் கூட்டாளி தினேஷை விசாரணைக்காக தமிழகம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டிச.13- ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்களை சுற்றி வளைத்த தனிப்படையினர் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்தார்.இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவேராஜஸ்தானில் கொள்ளை வழக்கு ஒன்றில் கைதான தினேஷ்  சவுத்ரிக்கு கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வைத்து தினேஷ் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி நாதுராமை பிடிக்கும் பணியிலோ போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரித்துவார், ரிஷிகேஷில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை

Friday December 15th, 2017 12:50:00 PM
ஹரித்துவார்: ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கரண்டி, டம்ளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஹரித்துவார், ரிஷிகேஷில் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைக்கவும், விற்கவும், வாங்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

பிரம்மபுத்திரா நதி மாசு அடைந்து வருவது குறித்து சீனாவிடம் கவலை தெரிவித்த இந்தியா

Friday December 15th, 2017 12:47:00 PM
டெல்லி: பிரம்மபுத்திரா நதி மாசு அடைந்து வருவது குறித்து சீனாவிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறினார். பிரம்மபுத்திரா நதி மாசுபடுவது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சரிடம், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கவலை தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும் பேசிய அவர் நதி நீர் பங்கீடு குறித்து நிர்வாக திட்டம் ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்பதை இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறினார். திபெத் - இயமமலைத் தொடரில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி அருணாச்சலப்பிரதேசம், அசாம் வழேிய ஓடி வங்கதேசத்தில் வங்ககடலில் கலக்கிறது. பிரம்மபுத்திரா நதி அருகே சீனா கட்டி வரும் அணையால் நதி நீர் மாசடைந்து வருகிறது. பிரம்மபுத்திரா நதி நீர் குடிப்பதற்கு தகுதியானது அல்ல என ஆய்வு ஒன்று கூறியுள்ளது நினைவுக் கூறத்தக்கது.

விசாகப்பட்டினத்தில் கூகுள் எக்ஸ் நிறுவனத்தின் தொழில் நுட்ப மையம் அமைக்க திட்டம்

Friday December 15th, 2017 12:33:00 PM
ஆந்திரா: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் எக்ஸ் நிறுவனம், தனது தொழில் நுட்ப மையத்தை அமைக்கிறது. ஆந்திர அரசும், கூகுள் எக்ஸ் நிறுவனமும் ஒன்றிணைந்து தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகளில் செயல்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் எக்ஸ் நிறுவனம் தனது தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில், ஆந்திர மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் நரலோகேஷ், கூகுள் எக்ஸ் தலைமைச் செயலதிகாரி ஆஸ்ட்ரோ டெல்லர் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. பின்னர் ஆந்திர மாநில அமைச்சர் நரலோகேஷ், கூகுளின் ஓட்டுநர் இல்லாக் காரிலும் பயணம் செய்தார்.


3 கி.மீ நீளத்தில் நூடுல்ஸ் தயாரித்து சீனா கின்னஸ் சாதனை

Friday December 15th, 2017 05:47:00 PM
பெய்ஜிங்: சீன சமையல் கலைஞர்கள், கையால் தயாரிக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் நீளமான நூடுல்ஸ் உருவாக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள உணவு நிறுவனத்தின் சமையல் நிபுணர்கள் உலகின் மிக நீளமான நூடுல்ஸை கைகளால் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அதன் மொத்த நீளம் 3 கி.மீ அல்லது 10 ஆயிரத்து 100 அடியாகும். 66 கிலோ எடையுள்ள இந்த நூடுல்ஸ் தயாரிக்க, 40 கிலோ ரொட்டி மாவு, 26 லிட்டர் தண்ணீர் மற்றும் 0.6 கிலோ உப்பு போன்றவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதை செய்வதற்கு மொத்தம் 17 தலைசிறந்த சமையல் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டியில் பங்கேற்ற ஒருவர், அதனை நன்றாக பிசைந்து கெட்டியான மாவாக்கினார். பின்னர் மூன்று பேர் இணைந்து மாவை சிறிய நூடுல்ஸ் அளவிற்கு உருட்டி பாத்திரத்தில் போட்டனர். இதனை சமையல் நிபுணர்கள் 17 மணி நேரத்தில் செய்து முடித்தனர். இதன் நீளத்தை கணக்கிடவே மொத்தம் 3 மணிநேரம் ஆகி இருக்கிறது. பின்னர் நூடுல்ஸ் பூண்டு, முட்டை மற்றும் தக்காளி சாஸ் ஊற்றி சமைக்கப்பட்டு 400 ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு பறிமாறப்பட்டது. இதற்கு முன்பு ஜப்பானை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் 1800 அடியில் நூடுல்ஸ் செய்ததே இதுவரை நீளமான நூடுல்ஸாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மர் கலவரத்தில் ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்யா மக்கள் கொலை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Friday December 15th, 2017 05:23:00 PM
ராக்கைன்: மியான்மரில் கலவரம் தொடங்கிய ஒரு மாத்தில் மட்டும் 6,700 ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் பாதுகாப்பு அதிகாரிகளை, ரோஹிங்யா முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர்(கிளர்ச்சியாளர்கள்) கடந்த ஆகஸ்டு மாதம் 25ம் தேதி தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் போலீசார், ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மீதும் வன்முறையை கட்டவிழ்த்துவிடத் தொடங்கினர். கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அவர்களது வீடுகளை தீயிட்டு கொளுத்தி, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அப்பாவி இஸ்லாமிய மக்கள் செய்வதறியாது பிற நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகத் தொடங்கினர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது. மியான்மர் அரசு வெறும் 400 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக கூறியது. இந்த நிலையில், வன்முறை தொடர்பாக மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ்(எம்.எஸ்.எஃப்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அங்கு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கலவரம் ஏற்பட்ட ராக்கைன் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 6,700 மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 730 போ் 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 69 சதவிகிதம் பேர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர். 9 சதவிகிதம் பேர் அவர்களது வீடுகளுக்குள் வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 60 சதவீதம் பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மீனவர்கள் 10 பேருக்கு 26ம் தேதி வரை காவல் நீடிப்பு

Friday December 15th, 2017 04:05:00 PM
கொழும்பு: கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 10 பேருக்கு 26ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்கள் 10 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 16 பேர் விடுதலை

Friday December 15th, 2017 03:26:00 PM
கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. இலங்கை அதிபரின் உத்தரவின் பேரில் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நல்லெண்ண அடிப்படையில்  விடுதலை செய்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள மற்ற 114 மீனவர்கள் வரும் திங்கள்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பெரு நாட்டு அதிபர் பதிவி விலக எதிர்க்கட்சியினர் நெருக்கடி : கட்டிட நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

Friday December 15th, 2017 03:01:00 PM
பெரு : தென் அமெரிக்கா நாடான பெருவின் அதிபர்  பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கி கட்டிட நிறுவனத்தினரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெருவின் அதிபராக உள்ள  பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கி நிதி மந்திரியாக இருந்தபோது ஒடேபெர்ச்ட் என்ற கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 5 மில்லியன் அமெரிக்கா டாலர் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு வெளியாகி இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை  பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கி மறுத்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கட்டுமான நிறுவனத்தின் ஆலோசகராக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பெரு நாட்டு நாடாளுமன்றத்தில் பலமிக்க எதிர்கட்சியாக உள்ள  பாப்புலர் போர்ஸ் கட்சியானது அதிபர் பதவி விலக போர்க்கொடி தூக்கியுள்ளது. கடந்த ஆண்டு அதிபராக பொறுபேற்ற குசின்ஸ்கி சொந்த கட்சியில் மட்டுமல்லாது அமைச்சரவையிலும் ஆதரவு இல்லை. இதனால் வர பதவி விலகல் நிலைக்கு தள்ளப்பட்டதாக பெருநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் டிரம்ப் குறுகிய காலத்தில் முக்கிய பணிகளை நிறைவேற்றியுள்ளார்: ரஷ்ய அதிபர் பாராட்டு

Friday December 15th, 2017 02:54:00 PM
மாஸ்கோ: அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் எதிராளிகள், ரஷ்ய உளவாளிகளைப் பற்றிய அச்சத்தை உருவாக்கியதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க அதிபரின் பணிகள் பற்றி தாம் மதிப்பிட வேண்டியதில்லை என்றும், அதை வாக்களித்த அமெரிக்க மக்கள்தான் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் அதிபர் டிரம்ப் சில முக்கிய பணிகளை நிறைவேற்றியிருப்பது வெளிப்படையாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க பொருளாதாரத்தின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்திருப்பதை சந்தை வளர்ச்சியின் மூலம் பார்க்க முடிவதாகவும் புதின் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாகக் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்று அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் உறவை மேம்படுத்தும் விருப்பம் இன்னும் உள்ளதா என அதிபர் டிரம்பைத்தான் கேட்க வேண்டும் எனக் கூறிய புதின், அவருக்கு அப்படிப்பட்ட விருப்பம் இருப்பதாக தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டகங்களுக்கான பிரத்யேக மருத்துவமனை உலகில் முதன்முறையாக துபாயில் திறப்பு

Friday December 15th, 2017 02:53:00 PM
துபாய்: ஒட்டகங்களுக்கான பிரத்யேக மருத்துவமனை உலகில் முதன்முறையாக துபாயில் திறக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம், அழகுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்படும் ஒட்டகங்களைப் பராமரிக்க பிரத்யேக சிறப்பு மருத்துவமனை ஒன்று துபாயில் கடந்த வாரம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 11 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.70 கோடி) செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கால்நடை மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், ஒட்டகங்களுக்கு கால்களில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் சிகிச்சையளிக்க பிரத்யேக அறுவை சிகிச்சை அரங்குகள் இருப்பதாகவும் மருத்துவமனை இயக்குநர் முகமத் அல் ப்ளூஸி தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 20 ஒட்டகங்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். இம்மருத்துவமனையில் எக்ஸ்ரே அல்லது அல்ட்ராசவுன்ட் ஸ்கேன் செய்வதற்கு 110 டாலர்கள் பெறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு 1000 டாலர்கள் முதல் வசூலிக்கப்படுகிறது. வளைகுடா பாரம்பரியத்தில் முக்கிய அங்கமாக விளங்கும் ஒட்டகங்களை பாதுகாக்கவே இந்த பிரத்யேக மருத்துவமனை செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லன்டனில் உலகிலேயே அதிக பொருட்செலவிலான தூதரக கட்டிடத்தை கட்டி முடித்தது அமெரிக்கா!

Friday December 15th, 2017 11:53:00 AM
லண்டன்: உலகிலேயே அதிக பொருட்செலவிலான தூதரக கட்டிடத்தை அமெரிக்கா, லண்டனில் கட்டி முடித்துள்ளது. அமெரிக்கா தன்னுடைய தூதர கட்டிடத்தை லண்டனின் தேம்ஸ் ஆற்றங்கரையில் மிகவும் நவீன வசதிகளுடன் கட்டத் தொடங்கியது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேம்ஸ் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிக்க, இந்திய ரூபாய் மதிப்பில் ஆறாயிரத்து 700 கோடி ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம், முழுக்க முழுக்க அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தின் வெளிப்புற சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் சுட்டெரிக்கும் வெயிலை வாங்கினாலும், கட்டிடத்தின் உள்ளே வெப்பத்தை அனுப்பாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தக் கட்டிடத்தை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சான் பிரான்ஸிஸ்கொ நகரில் ஆந்திர அமைச்சர் கூகுளின் ஓட்டுநர் இல்லா காரில் பயணம்

Friday December 15th, 2017 09:20:00 AM
சான் பிரான்ஸிஸ்கொ :ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கூகுளின் ஓட்டுநர் இல்லா காரில் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கொ நகரில் ஓட்டுநர் இல்லா காரில் அமைச்சர் பயணம் செய்தார்.  

கண்ணிவெடிக்கு தடை இலங்கை ஏற்றது

Friday December 15th, 2017 12:56:00 AM
கொழும்பு : இருபது ஆண்டு இழுபறிக்குப் பிறகு, சர்வதேச அளவிலான கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் 163வது நாடாக இலங்கை சேர்ந்துள்ளது.உலகளவில் கண்ணிவெடி பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக, 1999ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதை இதுவரை இந்தியா உட்பட 162 நாடுகள் ஏற்று கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை இலங்கை கடந்த 20 ஆண்டுகளாக ஏற்காமல் போக்கு காட்டி வந்தது.  இந்நிலையில், ஒப்பந்தத்தை ஏற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஐநா.வுக்காக இலங்கை அரசின் நிரந்தர பிரதிநிதியான ரோஹன் பெரைரா இதை தெரிவித்தார். இதன்மூலம், இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் 163வது நாடாக இலங்கை மாறியுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் அனைவருக்கும் வாய்ப்பு விண்வெளி சுற்றுலா போகணுமா ரூ.1.60 கோடி இருந்தால் போதும்

Friday December 15th, 2017 12:56:00 AM
டெக்சாஸ் : அடுத்த ஆண்டு முதல் அனைவரும் விண்வெளி சுற்றுலா செல்லும் வாய்ப்பை அமெரிக்க நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு ரூ.1.60 கோடி இருந்தால் போதும். விண்வெளி ஆராய்ச்சிதான் இதுவரை நடந்து வந்து இருக்கிறது. தற்போது முதன்முறையாக அனைவரையும் விண்வெளி சுற்றுலா அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று மேற்கொண்டது. மேற்கு டெக்ஸாசில் உள்ள புளூ ஆர்ஜின் என்ற அந்த நிறுவனம் விண்வெளிக்கு பொதுமக்களும் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு கேப்சூல் வகை விண்கலத்தை தயார் செய்து வந்தனர். அதை கடந்த செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்துள்ளனர்.இதற்கு ஏற்கனவே பயன்படுத்திய ராக்கெட்டுகள் உபயோகப்படுத்தப்பட்டன. இதனால் விண்வெளிக்கு செல்லும் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விண்கலம் மிகப்பெரிய ஜன்னல்கள் வடிவமைப்புடன் இந்த விண்கலம் அமைந்துள்ளது. 2.4 அடி அகலம், 3.6 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இதில் 6 இருக்கைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக விண்கலம் எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை அறியும் வகையில் தனித்தனி திரை வைக்கப்பட்டுள்ளது. அவசரமான காலங்களில் பயணிகள் பாராசூட் முறையில் தப்பிக்கும் வகையிலான வசதியும் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த விண்கலம் மூலமாக பயணிகள் ஒருநாள் விண்வெளி சுற்றுலா செல்ல முடியும். பூமியில் இருந்து 100 கிமீ மேலே இந்த விண்கலம் பயணிகளை கொண்டு செல்லும். அதன் மூலம் பல்வேறு கோள்களை அருகில் சென்று பார்க்க முடியும். இதற்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் சமீபத்தில் 6 பயணிகள் மற்றும் இரண்டு பைலட்டுகள் செல்ல ரூ.1.60 கோடி செலவாகி உள்ளது. தற்போது புளூ ஆர்ஜின் நிறுவனம் இந்த பயணத்திற்காக கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது.யார் வேண்டுமானாலும் செல்லலாம்புளூ ஆர்ஜின் நிறுவன செயல் தலைவர் பாப் ஸ்மித் இந்த திட்டம் குறித்து கூறுகையில்,’ எங்களது சோதனை முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ளன. படிப்படியாக எங்கள் திட்டத்தை நவீனப்படுத்தி வருகிறோம். அனைவரும் இந்த பயணத்தில் செல்லலாம். எங்களிடம் பணம் கட்டி செல்லும் பயணிகள் நலனில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது உள்ளது. அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி விண்வெளி சுற்றுலா பயணம் தொடங்கும்’ என்றார்.

போலீஸ் பயிற்சி மையம் மீது தற்கொலை படை தாக்குதலில் 17 பேர் பலி

Friday December 15th, 2017 12:56:00 AM
மொகதிசு : சோமாலியாவின் மொகதிசுவில் போலீஸ் பயிற்சி மையம் அமைந்துள்ளது. வரும் 20ம் தேதி சோமாலியாவில் போலீசார் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு நேற்று காலை போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வந்த ஒருவர் போலீஸ் அதிகாரிகள் நின்றிருந்த வரிசைக்குள் நுழைந்தார். அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதற்குள்ளாக அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தினான். இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சோமாலியாவை சேர்ந்த அல் சகாப் தீவிரவாத அமைப்பு உடனடியான பொறுப்பேற்றுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் விவகாரம் : இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தாக்கல் செய்த மசோதா தோல்வி

Friday December 15th, 2017 12:56:00 AM
லண்டன் : ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக  இறுதி சட்ட மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இதனால், தெரசா மே தலைமையிலான ஆட்சி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு எடுத்தது. முதற்கட்டமாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பிரெசல்ஸ் நகருக்கு சென்று இங்கிலாந்து வெளியேறுவதால் ஏற்படும் இழப்பீட்டை தடுக்க ரூ.4 லட்சம் கோடி வழங்குவதாக தெரிவித்து ஐரோப்பிய யூனியன் அமைப்புடன் ஒப்பந்தம் செய்தார். பின்னர், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் மசோதா மீது இறுதி ஓட்டெடுப்பு நடத்தி ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.நேற்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது அதிர்ச்சிகரமாக பிரதமர் தெரசா மே தாக்கல் செய்த மசோதா எம்பி.க்களால் தோற்கடிக்கப்பட்டது. மசோதாவுக்கு எதிராக 309 ஓட்டுகளும், ஆதரவாக 305 ஓட்டுகளும் விழுந்தன. இதனால் 4 ஓட்டு வித்தியாசத்தில் மசோதா தோற்கடிக்கப்பட்டது. குறிப்பாக ஆளும்கட்சி எம்பி.க்கள் 11 பேர், துணைத் தலைவர் ஸ்டீபன் ஹமாண்ட் தலைமையில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். தெரசா மே அரசு தாக்கல் செய்த மசோதா தோல்வி அடைந்துள்ளதால் அதிருப்தி எம்பி.க்களின் தலைவராக உள்ள ஸ்டீபன் ஹமாண்ட் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்ற எம்பி.க்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து அரசியலில் பிரச்னை உருவாகி உள்ளது.‘கடும் நடவடிக்கை’மசோதா தோற்கடிக்கப்பட்டது குறித்து இங்கிலாந்து அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் மசோதா தோற்கடிக்கப்பட்டதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். அதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை நிறுத்தி விட மாட்டோம். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். எம்பிக்கள் விரும்பும் மாற்றம் செய்யப்பட்டு மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்படும்’’ என்று தெரிவித்தார். பிரதமர் தெரசா மே கூறுகையில், ‘‘ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து எளிதாக வெளியேறுவதை அதிருப்தியாளர்கள் தற்போது தடுத்துள்ளார்கள். ஆனாலும், பணிகள் தொடரும். அதிருப்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.* பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவர் கிரான்ட் சாப்ஸ் திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.* இவர் ஆளும் கட்சியை சேர்ந்த 30 எம்.பிக்களுடன் இணைந்து தெரசா மேவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்கு கட்சியின் துணைத்தலைவர் ஸ்டீபன் ஹமாண்ட் ஆதரவு தெரிவித்துள்ளார்.* கன்சர்வேடிவ் கட்சி தலைவர் மற்றும் பிரதமரை மாற்ற 48 எம்.பி.க்கள் இணைந்து கமிட்டிக்கு மனு கொடுத்தால்தான் பரிசீலனை செய்யப்படும்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஏர்பஸ் ஏ380 சோதனை விமானம் கிறிஸ்துமஸ் மரம் வடிவில் வானில் பறந்து வாழ்த்து

Thursday December 14th, 2017 05:09:00 PM
ஹம்பர்க்: ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் ஒன்று கிறிஸ்துமஸ் மரம் வடிவில் வானில் பறந்து அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளது. ஏர்பஸ் ஏ380 என்ற விமானம் சோதனை பயணத்தின் போது ஜெர்மனியின் வான் பரப்பில் பறந்தது. அப்போது தொடங்கிய இடத்திலேயே பயணத்தை முடித்த விமானம் கிறிஸ்துமஸ் மரம் போன்ற தோற்றத்தில் பயணித்த ரேடார் காட்சிகள் பதிவாக்கியுள்ளன. விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும் சோதனைப் பயணத்தின் போது நிகழ்த்தப்பட்ட சாகசம் என்றும் ஏர்பஸ் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஹம்பர்க் ஃபிங்கென்வெர்டர் விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 12.47 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம், பின் 4.35 மணியளவில் அதே விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக கூறப்படுகிறது.

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இன்னும் வரவில்லை : ரெக்ஸ் டில்லர்சன் கருத்துக்கு வெள்ளை மாளிகை மறுப்பு

Thursday December 14th, 2017 05:01:00 PM
வாஷிங்டன் : வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் அணு ஆயுத சோதனைகளை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.அவரது கருத்தை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இதற்கிடையே  செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இது சரியான நேரமில்லை என்றார். வடகொரியா விவகாரத்தில் டில்லர்சனை விட அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். அந்த நாடு தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் வரை பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்க 19.2 பில்லியன் டாலர் நிதி

Thursday December 14th, 2017 03:58:00 PM
ரியாத்: சவூதி அரேபியாவில் தனியார் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு 19.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்க அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டுள்ளார். சவூதி அரேபிய நாணயத்தின் மதிப்பில் 72 பில்லியன் ரியால்கள் அளவுக்கு ஒதுக்கப்படும் இந்த ஊக்க நிதியில், 21.3 பில்லியன் ரியால்கள் வீட்டு வசதிக் கடன்களுக்கும், 10 பில்லியன் ரியால்கள் பொருளாதாரத் திட்டங்களுக்கு ஆதரவாகவும், 1.5 பில்லியன் ரியால்கள் பாதிப்பில் உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் செலவிடப்படும். சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்ய 2.8 பில்லியன் ரியால்கள் மதிப்பில் ஒரு நிதியத்தையும் சவூதி அரசு உருவாக்க உள்ளது. இதேபோல சிறிய நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சேவைகளுக்காக வசூலிக்கப்படும் தொகையில் 7 பில்லியன் ரியால்கள் அளவுக்கு கட்டணச் சலுகைகளையும் சவூதி அரசு வழங்க உள்ளது.

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 பேர் பலி

Thursday December 14th, 2017 03:10:00 PM
சோமாலியா: சோமாலியாவில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உடலில் குண்டுகளை கட்டி எடுத்து வந்த தீவிரவாதிகள் மொகதீசுவில் போலீஸ் பயிற்சி மையத்தின் உள்ளே நுழைந்து வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் 13 போலீசார் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவு இயக்கமான அல் சபாப் தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

அமெரிக்கர்களுக்கு பெரும் வரிக் குறைப்பு அறிவிப்பை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்க அதிபர் டிரம்ப் முடிவு

Thursday December 14th, 2017 02:39:00 PM
வாஷிங்க்டன் : அமெரிக்கர்களுக்கு பெரும் வரிக் குறைப்பு அறிவிப்பை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்க இருப்பதாக, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க நிறுவனங்களுக்கும் அமெரிக்க குடும்பங்களுக்கும் கூடுதல் வேலைவாய்ப்புகள், அதிக ஊதியம், பெரும் வரிக்குறைப்பு வழங்கும் வரி சட்டத்தை நிறைவேற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 4 பேர் சேர்ந்து 75 ஆயிரம் டாலர்கள் சம்பாதிக்கும் குடும்பத்திற்கு இதன் மூலம் 2 ஆயிரம் டாலர் அளவுக்கு வரி குறையும் என டிரம்ப் உதாரணம் காட்டியுள்ளார்.தொழில்-வணிகங்களுக்கும் வரி குறைப்பு செய்யப்பட இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். தற்போதுள்ள வரி தொடர்பான சட்டம் சுமை மிகுந்ததாகவும், சிக்கலானதாகவும் நியாயமற்றதாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தொழிற்சாலைகள் மூடப்படுவதோடு, வேலைவாய்ப்புகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து லட்சக் கணக்கான பெற்றோர் கவலைப்படும் நிலை உருவாகியிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் உலக வர்த்தக கழகத்தின் கூட்டம் நிறைவு

Thursday December 14th, 2017 02:39:00 PM
பியூனஸ் அயர்ஸ்: WTO எனப்படும் உலக வர்த்தக கழகத்தின் கூட்டம் எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், உலக வர்த்தக கழகத்தின் 11-வது கூட்டம் அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. உலக வர்த்தக கழகத்தைப் பொறுத்தவரை, எந்த விவகாரமாக இருந்தாலும் 164 உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொள்ளும்போது மட்டுமே உடன்பாடு எட்டப்படும். இந்த அடிப்படையில், இ-காமர்ஸ், மீன் பிடித் தொழிலுக்கான மானியம், உணவுப் பாதுகாப்புக்காக அரசுகள் தானிய இருப்பு வைப்பது உள்ளிட்ட எந்த விவகாரம் குறித்தும் எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் உலக வர்த்தக கழக கூட்டம் முடிவடைந்துள்ளது.உணவுப் பாதுகாப்புக்காக தானிய இருப்பு வைக்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சிக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டதால், இ-காமர்ஸ் உள்ளிட்ட பிரச்சனைகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான நிலைப்பாடு எடுத்தன. இதனால் உலக வர்த்தக கழகக் கூட்டத்தில் உருப்படியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஃபிலிப்பைன்ஸில் 30 நாய்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை

Thursday December 14th, 2017 02:12:00 PM
மணிலா : ஃபிலிப்பைன்ஸில் 30 நாய்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.நாய்களுக்கான கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக 40 நாய்கள் காற்றோட்டமில்லாத வேன் ஒன்றில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. கண்காட்சி நடைபெறும் இடத்தை அடைந்ததும், வேனின் கதவுகள் திறக்கப்பட்டபோது அதில் 30 நாய்கள் உயிரிழந்தவிட்டதைக் கண்டு அங்கிருந்து நாய்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாய்களின் உரிமையாளர் தப்பி ஓடி விட்டதாகவும், போலீசிடம் பிடிபட்டால் அந்நாட்டு சட்டப்படி 90 ஆண்டுகள் சிறை தண்டனையும், 96 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


மாண்புமிகு முதல்வர் என விரைவில் மு.க.ஸ்டாலின் அழைக்கப்படுவார் : ஆர்.கே.நகரில் வைகோ பேச்சு

Friday December 15th, 2017 04:31:00 PM
சென்னை: ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை செய்தார். அப்போது பேசிய வைகோ மாண்புமிகு முதல்வர் என விரைவில் மு.க.ஸ்டாலின் அழைக்கப்படுவார் என்று வைகோ தெரிவித்தார். புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க அரசு தவறிவிட்டதாக தெரிவித்த அவர், ஆர்.கே.நகரில் எந்த மக்கள் நலப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்!

Friday December 15th, 2017 02:30:00 PM
புதுடெல்லி: அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அவரின் கணவர் ராஜீவ்காந்தியின் மரணத்துக்குப் பின்னர், ஏறக்குறைய 7 ஆண்டுகள் கழித்து கடந்த 1997ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா பொறுப்பேற்றார். தற்போது, தமது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலக முடிவு செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக சோனியா காந்தியின் மகனும், துணைத்தலைவருமான ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் காங்கிரஸ் தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக, அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி, காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற சோனியா காந்தி, செய்தியாளர்களிடம் பேசியபோது 'ஓய்வு பெறுவது தான் தற்போது என்னுடைய பணி' என்று கூறியுள்ளார். இதனால், அரசியலில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்டகாலம் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவிலில் போலீசுடன் காங்கிரஸ் கட்சினர் வாக்குவாதம்

Friday December 15th, 2017 12:02:00 PM
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போலீசுடன் காங்கிரஸ் கட்சினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

அதிமுகவின் கொள்கை நிலைப்பாடாக எடுத்துரைக்க எந்த ஒரு நபருக்கும் அனுமதியோ, ஒப்புதலோ தரப்படவில்லை: ஓபிஎஸ், இபிஎஸ்

Friday December 15th, 2017 11:51:00 AM
சென்னை: அதிமுகவின் கொள்கை நிலைப்பாடாக எடுத்துரைக்க எந்த ஒரு நபருக்கும் அனுமதியோ, ஒப்புதலோ தரப்படவில்லை என ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கையிட்டுள்ளனர். தோழமைக்கட்சி என சிலர் ஊடகங்களில் கூறும் கருத்துக்கள், அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூரில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி

Friday December 15th, 2017 11:43:00 AM
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பேச்சியம்மாள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியை திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.

கடலூரில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராக திமுகவினர் முழக்கம்

Friday December 15th, 2017 10:38:00 AM
கடலூர்: கடலூரில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராக திமுகவினர் முழக்கமிட்ட வருகின்றனர். வண்டிபாளையத்தில் ஆய்வை முடித்துவிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருந்தினர் மாளிகை திரும்பினார். கடலூரில் திமுக அலுவலகம் வழியாக சென்ற ஆளுநருக்கு எதிராக திமுகவினர் முழக்கமிட்டனர்.

திமுக போராட்டத்தால் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வை கைவிட்டார்

Friday December 15th, 2017 10:00:00 AM
கடலூர்: திமுக போராட்டத்தால் கடலூர் பேருந்து நிலையத்தில் நடத்திய ஆய்வினை ஆளுநர் பன்வாரிலால் கைவிட்டுள்ளார். ஆளுநர் ஆய்வுக்கு திமுகாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடலூர் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல்  அருகே உள்ள வண்டிப்பாளையத்தில் தூய்மைப் பணியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மேற்கோண்டு வருகிறார்.

தெலங்கானாவில் போலீஸ் அதிரடி 8 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

Friday December 15th, 2017 01:53:00 AM
ஐதராபாத் : தெலங்கானாவில் 8 நக்சலைட்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஜூலையில், ‘சந்திரா புல்லாரெட்டி (சிபி)’ என்ற புதிய நக்சல் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில், 12 பேர் உறுப்பினராக இருந்தனர். இந்த அமைப்பில் உள்ள 3 பேரை, போலீசார் கடந்த 3ம் தேதி கைது செய்து துப்பாக்கி, கையெறி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள்மற்றும் உடமைகளை கைப்பற்றினர். இந்நிலையில், இந்த குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள தெகுலப்பள்ளி மண்டல் காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் நேற்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சண்டையில் ரமேஷ், ராமு, சுபாஷ் உட்பட 8 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். போலீசார் யாரும் காயம் அடையவில்லை. கொல்லப்பட்ட  நக்சலைட்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை: காங்கிரஸ் போராட்டம்

Friday December 15th, 2017 01:52:00 AM
புதுடெல்லி : குஜராத்தில் தேர்தல் நடத்தை  விதிகளை மீறியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கைஎடுக்க கோரி காங்கிரஸ் மகளிர் அணியினர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் சுஷ்மிதா தேவ் கூறுகையில், ‘‘பாஜ.வினர்  மீது கருணையும் மாற்று நிலைப்பாடும் காட்டும் தேர்தல் ஆணையம், அதுவே  காங்கிரஸ் தலைவர்கள் என்றால் தயக்கமின்றி உடனடி நடவடிக்கை என இரட்டை  நிலைப்பாடு காட்டுகிறது. குஜராத்தில் தேர்தல் முடிந்த நிலையில் பேரணி சென்ற மோடிக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்றார். இதனிடையே,  ராகுல் மீதான நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளது.

தேமுதிக மாவட்ட செயலாளர் பாஜவில் இணைந்தார்

Friday December 15th, 2017 01:35:00 AM
சென்னை : தேமுதிக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பரமசிவம், தலைமை பேச்சாளர் எம்.சக்கரவர்த்தி உட்பட அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பலர் தேமுதிகவில் இருந்து விலகி பாஜவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை இணைந்தனர். இவர்களுக்கு பாஜவின் உறுப்பினர் அட்டைகளை மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் வழங்கினார்.

ஆர்.கே.நகரில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா: வைகோ குற்றச்சாட்டு

Friday December 15th, 2017 01:32:00 AM
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கன்னியாகுமரியில் ஓகி புயலால் மாயமான 2,100 மீனவர்கள் குறித்து காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. 11 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆர்கே நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் நிச்சயம் வெற்றி பெறுவார். நானும் திமுகவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். அங்கு ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடாவில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.

அதிமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேச்சு

Friday December 15th, 2017 01:02:00 AM
சென்னை: தமிழக அரசு, அதிமுக மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறினார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் தண்டையார்பேட்டை வஉசி நகரில் நேற்று முன்தினம் பிரசார கூட்டம் நடந்தது. திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமை வகித்து பேசியதாவது:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றிபெற கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் கிடைத்து விட்டதால் ஆர்.ேக.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என ஆளும் கட்சியினர் நினைக்கின்றனர். இரட்டை இலை சின்னம் இருக்கும்போதே ஜெயலலிதா தோல்வியடைந்தார். இந்த தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றால் நிச்சயம் திமுக வேட்பாளர் வெற்றிபெறுவது உறுதி. இவ்வாறு வீரமணி பேசினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசுகையில், “திமுக வேட்பாளருக்கு எங்கு சென்றாலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இதை பார்க்கும்போது அதிமுக ஆட்சி மீது மக்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. ஆட்சியில் நடைபெறும் அவலங்களை தினந்தோறும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் வரும் 21ம்தேதி முடிவு கட்டுவார்கள். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவார்” என்றார். இதில், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், திமுக தேர்தல் பொறுப்பாளர் செல்வகணபதி, தொமுச பேரவை செயலாளர் சண்முகம் மற்றும் கூட்டணி கட்சியினர், திமுகவினர் ஏராளமானோர் பிரசாரத்தில் கலந்துகொண்டனர்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய முதல்வர், துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை

Friday December 15th, 2017 01:00:00 AM
சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:ஆர்.கே.நகரில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் அமலில் இருக்கிறது. இந்தநிலையில், கடந்த மாதம் 13ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சார்பில் பங்கேற்ற கூட்டத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, www.rknagar.in என்ற இணையத்தை தொடங்கி, அதில் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றமாகும். எனவே முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ இன்று பிரசாரம்

Friday December 15th, 2017 12:59:00 AM
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை 4.30 மணிக்கு ஏ.இ கோயில் சாலையில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து மாலை 5 மணியளவில் செரியன் நகர் மசூதி அருகில் உரையாற்றுகிறார். தொடர்ந்து மாலை 5.20 மணிக்கு நாகூர் தோட்டத்திலும், மாலை 5.50 மணிக்கு காசிபுரம் எஸ்.என்.செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் உரையாற்றுகிறார். மாலை 6.20 மணிக்கு டி.எச். சாலை அண்ணா சிலை அருகில், 6.30 மணிக்கு சேனியம்மன் கோயில் அருகில், 6.45 மணிக்கு வைத்தியநாதன் மேம்பாலத்திலும், 7 மணிக்கு நேதாஜி நகர் நேதாஜி சிலை அருகிலும் பேசுகிறார்.  7.15 மணியளவில் நேரு நகரிலும் 7.30 மணியளவில் எச்.6 காவல் நிலையம் அருகிலும், 7.50 மணியளவில் மணலி சாலை வழியாக தொப்பை வழியாக சென்று பிள்ளையார் கோயில் தெருவிலும், 8.15 மணிக்கு சுண்ணாம்பு கால்வாய் வழியாக சென்று அண்ணா நகர் கே.என்.எஸ் டெப்போவிலும் உரையாற்றுகிறார். 8.30 மணிக்கு மீனாம்பாள் நகரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

காசிமேடு மீனவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உறுதி

Friday December 15th, 2017 12:58:00 AM
சென்னை: காசிமேடு பகுதி மீனவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன் என வாக்கு சேகரிப்பின்போது திமுக வேட்பாளர் மருதுகணேஷ் கூறினார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் மருதுகணேஷ், காசிமேடு 43வது வட்டத்துக்கு உட்பட்ட திடீர் நகர், பல்லவன் நகர், பவர் குப்பம், சிங்காரவேலன் நகர், எம்ஜிஆர் நகர், காசி மாநகர், சி..காலனி, காசிபுரம் ஏ-பிளாக் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின்போது, சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் பேசுகையில், ‘‘  ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா போன்ற தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெறுவார்’’ என்றார்.மருதுகணேஷ் பேசுகையில், ‘‘காசிமேடு பகுதியில் மீனவர்களின் பிரச்னைகளை செவிசாய்க்காமல் ஆளுங்கட்சி செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் அதிக இன்ஜின் திறன் கொண்ட விசை படகுகளை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். பலர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. இதை ஆளுங்கட்சி கண்டுகொள்ளாமல் இருந்தது. நான் வெற்றிபெற்றதும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க இப்பகுதி மீனவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். காசிமேட்டில் மீனவர்களின் அடிப்படை பிரச்னைகளான குடிநீரில் கழிவுநீர் கலப்பது, சாலை வசதி ஆகியவை செய்து தருவேன்” என்றார். அப்போது, வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், நாகை மாவட்ட செயலாளர் கவுதமன், இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஜெய்னுல்லாபுதீன் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் திமுகவினர் உடன் சென்றனர்.

ஆட்சிக்கு வந்த 3 வருடங்களில் பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார் : திருவனந்தபுரத்தில் ராகுல் பேச்சு

Friday December 15th, 2017 12:56:00 AM
திருவனந்தபுரம் : ‘‘ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார்’’ என்று திருவனந்தபுரத்தில் ராகுல் காந்தி கூறினார். கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கேரளா முழுவதும் ‘படையொருக்கம்’ என்ற பெயரில் யாத்திரை நடத்தினார். இதன் நிறைவு விழா திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில், காங்கிரசின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: கேரளாவில் ஓகி புயலால் ஏராளமான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின்  நலனுக்காக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் எழுப்பி, பிரச்னைகளை தீர்க்க போராடும். கேரள அரசைப் போலவே மத்திய அரசும் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. 3 ஆண்டுகளுக்கு முன் மக்களின் பெரும் நம்பிக்கையுடன் மோடி ஆட்சிக்கு வந்தார். அப்போது மக்கள் அவரது பேச்சை பெரிதும் நம்பினர். ஆனால், இப்போது அவர் மக்களின் நம்பிக்கையை முழுவதும் இழந்து விட்டார். இப்போது அவரை நம்ப மக்கள் தயாராக இல்லை. முன்பெல்லாம் பிரதமர் மோடி ஊழல் குறித்து தான் அதிகமாக பேசுவார். ஆனால் சமீப காலமாக ஊழல் குறித்து பேசுவதை நிறுத்தி விட்டார். பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷாவின் மகனின் வருமானம் 3 மாதத்தில் 50,000 ரூபாயிலிருந்து 8 கோடியாக உயர்ந்துள்ளது. அது குறித்து இதுவரை மோடி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. பிரான்சிடமிருந்து ரபேல் விமானங்களை வாங்க புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அது குறித்தும் பிரதமர் பேச மறுக்கிறார். இவ்வாறு ராகுல் பேசினார். முன்னதாக தனி விமானம் மூலம்   திருவனந்தபுரம்  வந்த ராகுல், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பூந்துறை, விழிஞ்ஞம் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சட்ட நடவடிக்கைக்குப் பிறகே ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலம் மீட்கப்பட்டது : சைதை துரைசாமி விளக்கம்

Friday December 15th, 2017 12:56:00 AM
சென்னை : நிலத்தை அபகரித்து வைத்திருந்த ஆக்கிரமிப்பாளர்கள் மீது நீதிமன்றம் மூலம் நில உரிமையாளரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, இடம் மீட்கப்பட்டதாக முன்னாள் மேயர் சைதை துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பொது வாழ்க்கையில் சட்டரீதியான வழிகளை மட்டுமே பின்பற்றுபவன் நான். மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக வாழ்பவன். என்னை பலர் ஏமாற்றியிருக்கிறார்களே தவிர, நான் எவரையும் ஏமாற்றியது இல்லை. தவறான வழியில் பொருள் ஈட்டியதும் இல்லை. கடந்த 2011 முதல் 2016 வரை சென்னை மாநகர மேயராக அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றி, மக்களிடம் நற்பெயர் பெற்றுள்ளேன். கந்தன்சாவடிக்கு தொடர்பே இல்லாதவர் ஆர்.வினோத்குமார். இவர் கூறியிருக்கும் புகார்களுக்கு என்ன ஆதாரங்கள் இருக்கிறது? கந்தன்சாவடியில் குறிப்பிட்டுள்ள அந்த இடம் கடந்த 12 ஆண்டுகளாக காலி நிலமாக இருக்கிறது. 2005ம் ஆண்டு இந்த இடத்தை எடிசன் நிறுவனம் வாங்கியபோதும், காலி நிலமாகத்தான் இருந்தது. எடிசன் நிறுவனம் இடத்தை வாங்கிய பிறகு குடிசைகள் காலி செய்யப்படவில்லை.2005ம் ஆண்டுக்கு முன்பு அந்த இடத்தை அபகரித்து வைத்திருந்த ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றம் மூலம் நில உரிமையாளரால் நியாயமான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதற்கான நீதிமன்ற உத்தரவு, ஆர்.டி.ஓ. உத்தரவு மற்றும் வில்லங்க சான்றிதழ் போன்ற ஆதாரங்கள் காட்டப்பட்ட பிறகே இந்த நிலம் எடிசன் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. 2005ம் ஆண்டு காலியாக வாங்கப்பட்ட நிலத்தை பற்றி இப்போது கேள்வி எழுப்புவதற்கு காரணம் என்ன? சமீபத்தில் எடிசன் நிறுவனத்துக்கு சொந்தமான காலி இடத்தை அருகில் உள்ள நிலத்துக்காரர் வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்திருந்தார். எந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்பதை அளக்க சென்ற அதிகாரிகளுக்கு நில அபகரிப்பாளர்கள், ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நில ஆக்கிரமிப்பு செய்ததை அதிகாரிகள் உறுதி செய்தபடியால், பக்கத்து நிலத்துக்காரர் ஆத்திரமடைந்து என் மீது பொய் புகார் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். என் மீது புகார் கொடுத்திருக்கும் வினோத்குமார், பக்கத்து நிலத்துக்காரரின் நெருங்கிய உறவினர் ஆவார்.நான் மேயர் பதவிக்கு வருவதற்கு முன்னரே ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டேன். அதன்பிறகு என் பெயரில் எந்த ஒரு சொத்தும் வாங்கப்படவில்லை. யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் அவசியம் எனக்கு எப்போதும் நேர்ந்தது இல்லை. நான் வசிக்கும் வீட்டைக்கூட அறக்கட்டளைக்கு கொடுத்துவிட்டு, வாடகை கொடுத்து குடியிருந்து வருகிறேன். மாதம் 60 லட்சம் ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்த எனக்கு சொந்தமாக பெருங்குடியில் அமைந்திருந்த தமிழகத்தின் முதல் தனியார் ஐடி பார்க்கை விற்பனை செய்து என் மன திருப்திக்காக மக்கள் சேவை செய்து வருகிறேன். என்னுடைய மனிதநேய அறக்கட்டளையை யாரிடமும் நன்கொடை பெறாமல் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். பிறர் நிலங்களை அபகரித்து, அந்த பணத்தில் சேவை செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நில ஆக்கிரமிப்பை தொழிலாக செய்து வருபவர்கள்தான் என்னுடைய தூய்மைக்கும் நேர்மைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு பயன்பெறும் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் : கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Friday December 15th, 2017 12:55:00 AM
சென்னை : மக்களுக்கு பயன்பெறும் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று கிறிஸ்துமஸ் விழாவில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துவ விழா சென்னை எம்.ஆர்.சி நகரில் நேற்று நடந்தது. விழாவிற்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிக்கோ இருதய ராஜ் தலைமை வகித்தார். விழாவில், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு, கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு இனிேகா இருதயராஜ் நினைவு பரிசு வழங்கினார். காங்கிரஸ் முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ், விஜி சந்தோஷம், இந்திய கத்ேதாலிக்க திருச்சபை தலைவர் பசேலியோஸ் கிளிமஸ், ஒஸ்தாதியோஸ், பேராயர்கள் எஸ்றா சற்குணம், ஏ.எம்.சின்னப்பா, பால் தயானந்தன், அருள், சொர்ண ராஜ் உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஜாக்குலின், மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்று வந்தார். அவர் உடல் நலிவுற்ற நிலையில் நான் அவர் சார்பில் இந்த விழாவில் கலந்து கொள்கிறேன். இந்த விழாவிற்கு என்னிடம் தேதி கேட்டவுடன் நான் கொடுத்ததாக இங்கு கூறினார்கள். இனி நீங்கள் கேட்க வேண்டியதில்லை. என்னை கேட்காமலேயே விழாவினை ஏற்பாடு செய்து கொள்ளலாம். நான் தவறாமல் வந்து விடுவேன். இந்த விழா தேர்தல் பிரசார விழாவாகவும் நடைபெறுகிறது. அப்படி பேச வேண்டிய சூழ்நிலை இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. பேசுவதை விட செயலில் நம் திறமையை காட்டுவதுதான் முக்கியம். சிறுபான்மை மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் அமைத்து தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கினார். அதிமுக அரசின் மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்தார். சிறுபான்மை நல இயக்கம் அமைத்தார். இப்படி பல சாதனைகளை செய்தார். தமிழ்நாட்டில் இன்று நடக்கும் ஆட்சி வெறும் காட்சியாக குதிரை பேர ஆட்சியாக நடக்கிறது.நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஓகி புயலால் குமரி மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப்பற்றி கவலைப்படாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. மீனவர்களின் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.  இன்று கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி வந்து மீனவ மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மீனவர் நலனை பாதுகாக்க மத்தியில் தனி அமைச்சர் நியமிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அது அமையும் வகையிலும் நாம் விரும்பும் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். அதே போல், மக்களுக்கு பயன்பெறும் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். அந்த நாள் விரைவில் வர உள்ளது. அதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நிலையை நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். அது நமக்காக அல்ல. நமது சந்ததிக்காக. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சொல்லிட்டாங்க...

Friday December 15th, 2017 12:55:00 AM
அதிமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை தினந்தோறும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு வரும் 21ம் தேதி முடிவு கட்டுவார்கள்.இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என ஆளும்கட்சியினர் நினைக்கின்றனர்.நியாய விலை கடை பணியாளர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை கைவிட்டு போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.ஆர்கே.நகர் இடைத்தேர்தலில்  டிடிவி.தினகரன் குறுக்கு வழியில் வாக்கு சேகரிக்க முயற்சித்து வருகிறார். அவரது எண்ணங்கள் சிறிதளவும் நிறைவேறாது.

இரட்டை இலை சின்னம் லஞ்சம் வழக்கில் டிடிவி தினகரன் உட்பட 9 பேருக்கு சம்மன்: நீதிமன்றத்தில் 21ம் தேதி ஆஜராக உத்தரவு

Friday December 15th, 2017 12:53:00 AM
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் உட்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 பேரும் வரும் 21ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி கிரண் பன்சால் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 9 பேருக்கும் டெல்லி குற்றவியல் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதிமுகவின்  இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி டிடிவி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா புரோக்கர்கள் சுகேஷ் சந்திரசேகர், நத்து சிங், லலித்குமார், புல்கித் குந்த்ரா மற்றும் ஜாய் விக்ரம் உட்பட 9 பேரை இதுவரை டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாய் விக்ரம் ஆகிய இருவரையும் தவிர மற்ற அனைவரும் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நேற்று முன்தினம் டெல்லி குற்றவியல் போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டாம் கட்டமாக 40 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.இதில் வழக்கின் முக்கிய நபர்களான டிடிவி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, புல்கித் குந்த்ரா மற்றும் ஜாய் விக்ரம் கரண் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் புதிதாக சேர்க்கப்பட்டது. அதிலும் குறிப்பாக 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் டிடிவி.தினகரன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், “இரட்டை இலைக்கு தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் வரும் 21ம் தேதியன்று நடைபெறும் விசாரணையின் போது வழக்கு குறித்தான முழு குற்றப்பத்திரிகையும் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அப்போது வழக்கின் குற்றவாளிகளான டிடிவி.தினகரன் உட்பட 9 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.எனவே, வரும் 21ம் தேதியன்று தினகரன் டெல்லி தீஸ்ஹசாரே மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவது குறித்து டெல்லி குற்றவியல் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.